Lord Skanda-Murugan
 

முருக வாரணமாயிரம்

நன்றி: மாதவிப்பந்தல், கே.ஆர்.எஸ் அளிக்கும் மணப்பாடல்

இன்று பங்குனி உத்திரம் (Apr 05-2012) = பல முருகத் தலங்களில் திருமணம்!
என் மனமென்னும் தலத்திலும் திருமணம் தான்! = நானும் முருகனும் = அதான் இந்த முருக வாரணமாயிரம்! அவனுக்காகவே காத்திருந்து... அவனே என்று இருந்து விட்டால்?

முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன்!
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டேன்!
பின்னம் அவனுடைய ஆரூர் கேட்டேன்!
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனேன்!

முருகனுக்காகவே இருக்கும் தருணங்கள்!
- இவ்வாறு கற்பனை பண்ணிப் பார்க்கும் போது...கனா காணும் போது...என் மனம் நினைத்தாலே இனிக்கும்!......இதோ...முருக வாரணமாயிரம்!



என்னது? அவனே வந்து விட்டானா?
அவனோடு கூட்டமாக இன்னும் பலர் வந்து விட்டார்களா?
வந்து என் அப்பா கிட்ட என்னமோ பேசறாங்களா?

ஒரே கோஷமா இருக்கே! ஏதோ ஓதறாங்களே! டும் டும் டும் என்று சத்தம் கேட்குதே! என்னென்னமோ நடக்குதே!
எங்கு திரும்பினாலும் வேலும் மயிலுமா இருக்கே! திடீர்-ன்னு இத்தனை வேல் எங்கிருந்து முளைச்சிச்சி? நான் காண்பதெல்லாம் கனவா? நனவா?
சந்தேகமே இல்லை!  நனவே தான்!...... தொடும் போது கூசுதே!


கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்! - தோழீ நான்!
முங்கினேன் முருகொடு முதலிரவில் - தோழீ நான்!


வாரண மாயிரம் சூழ வலம் செய்து
ஏரகன் முருகன் ஏகின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் ஏந்திப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்!...(1)


நாளைத் திருமணம் அதற்கென்றே நாளிட்டு
பாளைக் கமுகுடன் பசும் வாழைப்-பந்தல் கீழ்
வேளைப் போதினில் வேல்முருகன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் - தோழீ நான்!...(2)

 


தோணியன் ஈசரோடு தேவர் குழாம் எல்லாம்
வேணியன் எந்தை வேங்கடவன் மகள்பேசி
காணியல் கூறைச் சீலையொடு மாலையும்
வாணியள் சூட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(3)

(சீர்காழித் தோணியப்பர் எனப்படும் சிவபெருமான் தலைமையிலே, அனைவரும் வந்திருந்து,
எந்தையாம், சிந்துபூ மகிழும் திருவேங்கடத்துஅண்ணலிடம், என்னைக் கேட்க...
காண அழகுடைய அரக்குச் சிவப்பான கூறைச் சீலையைக் கொடுத்து,
ஈசனின் மானசீக மகளான வாணி, நாத்தனராக மாலைசூட்டி, என்னை அழைத்துச்செல்ல...)


நால்திசை நாரங்கள் கொணர்ந்து நனிநல்கி
வேல்முறைச் சான்றோர் வேதமாம் தமிழ்ஓதி
சேல்விழி் மைந்தன் சேந்தனோடு என்தன்னை
ஆல்மரக் காப்பிடக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(4)

(நாரம்=தண்ணீர் ஜீவநதி நீர்க் கொண்டு,
வேல்முறை சான்றோர்கள் தமிழ் மந்திரங்களை ஓத,
பந்தக்காலில் உள்ள ஆலமரத்துக் காம்பிலே கட்டிய மஞ்சக் காப்பினை எடுத்து,
எங்கள் இருவருக்கும் காப்பு கட்ட...)



கதிரொளித் தீபம் வரிசைகள் பலவேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையின் சங்கத் தமிழ்வேள் மண்டபத்துள்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(5)

திருமணப்பூண் பூட்டல் - திருமாங்கல்ய தாரணம்

 

மத்தளம் கொட்ட நாதசுரம் நின்றூத
முத்துடை தாமம் மாதவிப் பந்தல் கீழ்
மைத்துனன் முருகன் திருத்தாலி கட்டியெனைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(6)

(மாதவிப் பந்தல் என்னும் செண்பகக் கொடிகளின் கீழே, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க,
மைத்துனன்-மச்சான் என்று ஆசையோடு அழைக்கும் முருகத் திரு நம்பி,
துளசி மாடம் பொருந்திய, சக்கரம், சங்கு, தண்டு, வாள், வில் துலங்கும் ஐம்படைத் தாலியை என் கழுத்திலே கட்டி,
என் கைத்தலம் பற்றி, என்னை அவனுக்கென்று ஆக்கிக் கொள்ள...)

 



வாய்நல்லார் மாறன் தமிழ்ஓதி மந்திரத்தால்
சேய்வேண்டி நாணல் படுத்துப் பரிதிவைத்து
சீர்வளர் மயில்அன்னான் மயிலாள் என் கைப்பற்றித்
தீவலம் செய்யக் கனாக்கண்டேன் - தோழீ நான்! ...(7)

(அரையர்கள், தமிழ் வேதமான திருவாய்மொழியை,
- "
நல்ல கோட்பாட்டு உலகங்கள்முன்றினுள்ளும்தான்நிறைந்து,
நல்லபதத்தால்மனைவாழ்வர்கொண்டபெண்டிர்மக்களே
"
என்றுஓத -
நாணல்
பரப்பி - அகில்குச்சிகளால்வேள்விஓம்பி
என் கைப்பிடித்து -
இருமயில்கள்நடந்துவருவதுபோல்,
ஒயிலாகத்தீவலம்வர...)


இன்னைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
என்னை உடையவன் எழில் முருகத் திருநம்பி
முன்னை என் கால்பற்றி முன்றில் அம்மியின் மேல்
பொன்மெட்டி பூட்டக் கனாக்கண்டேன் - தோழீ நான்! ...(8)



வரிசிலை மன்மதன் அண்ணன்மார் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
கரிமுகத்து இளையோன் கைமேல் என் கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(9)

(
உலகு அத்தனைக்கும் கிளர்ச்சி ஊட்டும் மன்மதனோ, என் சொந்த அண்ணன்; நாரணத் தந்தையின் மானசீக மகன் -
திருக்கை வேலின் காதல் முன் கரும்பு வில்லின் காமம் நிற்குமோ?
தொலைவில் இருந்து அம்பெய்த முடியாமல், அருகில் வந்து, முருக மைத்துனனாகப் பொரிமுகம் தட்டி,
என்னையானைமுகத்தான் தம்பியிடம் ஒப்புவிக்க..)


குங்குமம் இட்டு குளிர்ச் சாந்தம் எனக்கிட்டு
மங்கலக் குடதீபம் கையேந்தி மனைக்குள்ளே
அங்கவனோடு நான் உடன்சென்று இல்வாழ
முங்கினேன் முருகொடு முதலிரவில் - தோழீ நான்! ...(10)

(நித்ய சுமங்கலிப் பொட்டிட்டு, சாந்தும் இட்டு,
காமாட்சி அம்மன் விளக்கைக் குடத்தில் வைத்து,
பத்திரமாக முருக மனைக்குள் புக...பின்பு முருக நம்பியும் எனக்குள் புக...)


கந்தனுக்காகத் தான் கண்ட கனாவினை
முந்துற மாதவிப் பந்தலின் பேதை சொல்
அந்தமும் ஆவியும் நீயே நீயெனச்
செந்தூர் முருகனின் சேவடிச் சேர்வரே!



கருப்பூரம் மணக்குமோ? கமலப்பூ மணக்குமோ?
திருமேனித் திரள்முழுதும் தித்தித்து இருக்குமோ?
இருதோளில் சாய்ந்தே துயில்காணும் இன்பத்தை
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாய்நீ வடிவேலே!