Lord Skanda-Murugan
 

ஒர் அரசியல் கதை

திருமுருக கிருபானந்த வாரியார்

திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் கல்லூரி ஒன்றில் சொற்பொழிவாற்றிக் கொண்டு இருந்தார். சொற்பொழிவின் நிறைவில் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பட்டம் பயிலும் மாணவர்கள் "அரசியல் பற்றி தங்கள் கருத்து என்ன?" என்ற கேள்வி எழுப்பினார்கள். வாரியார் ஸ்வாமிகள் ஒரு கதை சொன்னார்.

ஒரு சாம்ராஜ்யம் இருந்தது. அங்கு பட்டத்து யானை மூலம் அரசனை தேர்ந்தெடுக்கும் முறை பின்பற்றப்பட்டது. அப்படி யானையினால் மாலை சூட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுபவர் எல்லாவித ராஜ போகங்களுடன் ஆட்சி புரியலாம். ஆனால் அவரது பதவி காலம் ஐந்து ஆண்டுகள் மட்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரை நாட்டை விட்டு வெளியேற்றி கடலுக்கு அப்பால் உள்ள தீவுப் பிரதேசத்துக்கு நாடு கடத்தி விடப்படுவார்.

அரசராக தேர்ந்தெடுக்கப்படுபவர் தனது ஆட்சி காலத்தில் மக்களுக்கு சேவை செய்வதையே லட்சியமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். ஐந்தாண்டு கால நிறைவில் தீவில் விடப்பட்டு வறுமையில் வாடுவார்கள்.

மக்கள் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை ஐந்தாண்டு முடிவில் பதவி இழந்தவருக்கு மாற்றாக வேறு ஒருவரை யானை தேர்ந்து எடுத்தது. அவர் ஆட்சியில் மக்கள் ஒன்றும் அவ்வளவு நன்றாக இல்லை. அனியாயமாக வரி போட்டு மக்களை வாட்டி வதைத்து விட்டார். எப்போது ஐந்து ஆண்டுகள் முடியும், இவர் ஆட்சி பீடத்தில் இருந்து இறக்கப்பட்டு தீவுப் பிரதேசத்துக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் எதிர்பார்த்த ஐந்தாண்டு காலம் முடிவுக்கு வந்தது. அந்த கொடுங்கோல் அரசனை ஆட்சியில் இருந்து நீக்கி படகில் ஏற்றிக் கொண்டு தீவுப் பிரதேசத்துக்கு கொண்டு போனார்கள். இப்படி கொண்டு போகும் போதெல்லாம் பதவி இழந்த அரசர்கள் வருந்திப் புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் இந்த நபர் எந்த வருத்தமும் இல்லாமல் படகில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அவரை படகில் ஏற்றிக் கொண்டு போனவர்களுக்கு வியப்பாக இருந்தது. அவரைப் பார்த்துக் கேட்டார்கள் பதவி இழந்து தீவில் வறுமையில் வாழப் போகிறீர்கள். அதைப் பற்றி கொஞ்சம் கூடக் கவலையில்லாமல் மகிழ்ச்சியோடு இருக்கறீர்களே எப்படி? அதைக் கேட்ட அந்த முன்னாள் அரசன் "என்னுடன் அந்த தீவுக்கு வந்து பாருங்கள்" என்று சொன்னான்.

படகு தீவின் கரையை அடைந்தது. உடன் வந்தவர்கள் அந்த தீவைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். வறண்டு போய் இருந்த தீவு அங்கு இல்லை. மிகப் பெரிய அரண்மனை, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், தோட்டங்கள், பூங்காக்கள் என்று அந்த தீவே செல்வச் செழிப்புடன் சொர்கலோகம் போலக் காட்சி அளித்தது. உடன் வந்தவர்கள் திகைத்துப் போனார்கள்.

திருமுருக கிருபானந்த வாரியார்

அப்போதுதான் தெரிந்தது, அந்த முன்னாள் அரசர் தம் ஐந்தாண்டு கால ஆட்சியில் தன் வரும்கால சந்ததியினர் பலரும் பயன்பெறும் வகையில் அந்த தீவில் சொத்துக்களை சேர்த்து வைத்துக் கொண்டார் என்பது. அந்த காலத்தில் அரசனை யானை மாலைப் போட்டுத் தேர்ந்தெடுத்தது. தேர்ந்தெடுக்கப்பட்டவர் எப்படிப்பட்டவர் என்று அதற்குத் தெரிய வாய்ப்பில்லை.

அதனால் அதிருஷ்டம் உள்ளவர்கள் எவர் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வர முடிந்தது. அவர் இஷ்டம் போல ஆட்சி புரிய முடிந்தது. ஐந்தாண்டு காலம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சி செய்ய முடிந்தது.

ஆனால் இப்போது ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கிறது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. முன்னைப் போல அரசரை தேர்ந்தெடுக்கவில்லை நாம். அரசருக்குப் பதிலாக அமைச்சர்களை தேர்ந்தெடுக்கிறோம் நாம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறுகிறது. ஆனாலும் முன்பு சொன்ன அரசர் பதவி இழந்தாலும் பரம்பரைக்கே சொத்து சேர்த்தது போல இந்நாளில் பதவி இழந்தாலும் அமைச்சர்கள் சொத்து சேர்த்து விடுகிறார்கள். இந்தக் கதையைக் கூறி விட்டு வாரியார் ஸ்வாமிகள் கூறினார் எனக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. கதை மூலமாக உங்களுக்கு அரசியல் பற்றி எதாவது தெரியுதா சொல்லுங்கள்' என்றார்.

"ஐயா நீங்கள் சொன்னக் கதையினால் இன்றைய அரசியல்வாதிகளின் முறையற்றப் போக்கு புரிகிறது" என்றனர். அதற்கு வாரியார் ஸ்வாமிகள் சொன்னார், 'இந்தக் கதையை சொன்னதின் நோக்கம் அது மட்டும் அல்ல. கதை உணத்தும் இன்னொரு கருத்தும் இருக்குது. நீங்கள் இங்கு இம்மையில் சுகம் அனுபவிக்கும்போதே நம் பிற்காலத்துக்கும் அதாவது மறுமைக்கும் புண்ணியம் சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் அது.'

வாரியார் ஸ்வாமிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வித்தையை கற்றவரல்லவா!

துலாக் கோல் சோம நடராசன்
4, எம். கே. நகர்
வாங்கப்பாளையம், கரூர்-6

(Transcribed into Tamil Unicode by Santhipriya)