Lord Skanda-Murugan
 

ஒரிஸ்ஸா மானிலத்தில் கார்த்திகேய வழிபாடு

Lord Karttikeya
Lord Kārttikeya

Kailash Pattanaik

ரிஸ்ஸா மானில நாட்டுப்புற மக்கள் முருகப் பெருமானை கார்த்திகேயா அல்லது கார்த்திகா என்றே அழைக்கின்றார்கள். ஒவ்வொரு கலாச்சாரத்திலும் அவரவர்கள் வாழ்கை முறைக்கு ஏற்ப கடவுள் வழிபாடு உண்டு. சிலை வழிபாடுகள் இல்லாத இடத்தில் கூட அங்குள்ளவர்களை பண்டிதர்கள் ஒரு வித நம்பிக்கை பாதையில் அழைத்துச் செல்கிறார்கள். எந்த சமூகத்தை சேர்ந்த மக்களாக இருந்தாலும் சரி , அவர்கள் எந்த மொழியை பேசினாலும், அவர்களை ஒற்றுமைப் படுத்தி இணைத்து வைத்துள்ளது அவர்களுடைய கலாச்சாரத்துடன் இணைந்து உள்ள பக்தி மார்கமான கடவுள் வழிபாடே.

ஒரிசா மாநிலம் தென் இந்திய மாநிலத்துடன் நிறைய தொடர்புக்களை வைத்துக் கொண்டு இருந்தது . மூன்றாம் நூற்றாண்டில் தென் இந்தியப் பகுதியில் ஆந்திராவை சேர்ந்த மன்னர்கள் பெரும் ஆதிக்கத்தில் இருந்தார்கள். அப்போது கீ.பீ. 1484 ஆம் ஆண்டுகளில் ஒரிசாவின் ஒரு பகுதியை ஆண்டு வந்த சூர்யா வம்சத்தை சேர்ந்த புருஷோத்தம தேவா என்ற மன்னன் தான் முன்னர் இழந்து இருந்த தென் ஒரியப் பகுதிகளை ஆந்திரப் பகுதியில் இருந்த பஹமணி ஆட்சியிடம் இருந்து மீண்டும் கைப்பற்றினார். அதன் பின் ஏழு ஆண்டுகள் கிருஷ்ணதேவ ராயா ஒரிசா மன்னர்களுடன் போரிட பின் பிரதாப ருத்திர தேவா என்ற ஒரிசா மன்னனுடன் 1519 AD யில் ஒரிசா மற்றும் ஆந்திர மாநிலங்களின் எல்லையாக கிருஷ்ணா நதி இருக்குமாறு போர் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார்.

அது முதல் தென் இந்தியாவுடன் சமூக கலாச்சார பரிவர்த்தனைகளை இரு மாநிலங்களும் செய்து கொண்டாலும் கார்த்திகேயா என்ற முருகனின் பெருமை அங்கு பரவவில்லை. இத்தனைக்கும் தென் இந்தியாவில் கார்திகேயப் பெருமான் முக்கியக் கடவுளாகவே பார்கப்படுபவர்.

Lord Karttikeya (18571 bytes)
Lord Kārttikeya

ஒரியா நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையில் சிவன், பார்வதி, மங்களா தேவி போன்ற கடவுட்களுடன் கார்த்திகேயர் பூஜிக்கப்பட்டாலும், அனுதினம் வணங்கப்படும் முக்கியக் கடவுளாக கார்த்திகேயர் ஏற்கப்படவில்லை. ஆனாலும் அங்குள்ள கிராம மக்களின் வாழ்க்கையில் அவர் வழிபாடு முக்கிய பங்கைப் பெற்று உள்ளது.

ஒரிசா மானிலத்தின் பெரும்பான்மை இனத்தவர் இந்துக்கள். பெருமை வாய்ந்த ஒரிசாவில் பல கடவுளுக்கும் ஆலயங்கள் இருந்தாலும் கர்திகேயருக்கு என தனி ஆலயம் எதுவும் இல்லை.

பொதுவாகவே இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளவர்களும் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக குறிப்பிட்ட தெய்வ வழிபாடு செய்வது உண்டு. உதாரணமாக மழை பெய்யாவிடில் அதற்கு ஒரு கடவுள், அறுவடை காலங்களில் ஒரு கடவுள், என்று குறிப்பிட்ட காலங்களில் சில தெய்வங்களை வேண்டிக் கொண்டு வழிபடுவார்கள்.

அது போலவே கந்தனுக்கும் தனி ஆலயம் இல்லாத ஒரிசாவில், குழந்தை பாக்கியம் வேண்டும், முக்கியமாக ஆண் குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக அவர்கள் பிரார்த்தனை செய்வது கார்திகேயப் பெருமானைத்தான். ஒரிசாவில் இடங்களுக்கு ஏற்ப கார்த்திகேய வழிபாடு மாறுபட்டு இருந்தாலும் கூட பூரி நகரில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் கார்த்திகேய வழிபாடு அமைந்து உள்ளது.

குழந்தை செல்வம் இல்லாதவர்கள், முக்கியமாக ஆண் மகவு வேண்டும் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம்வரை கார்த்திகேய விரதித்தனை தொடர்ந்து செய்து முடித்தப் பின் சில சடங்குகளைக் கடை பிடிக்க வேண்டும். முதலில் புரோகிதர்கள் வந்து கார்த்திகேய பூஜை புனஸ்காரங்களை துவக்கி வைக்க கார்த்திகேய பூஜை துவங்குகிறது. அவர் பூஜையை துவக்கியப் பின் தம்பதியர் தெய்வங்களுக்கு மலர் மாலை அணிவித்து பிரார்த்தனை செய்கிறார்கள். மறு நாள் முதல் பண்டிதரே பூஜைகளை செய்கின்றார். அவரவர் சக்திக்கு ஏற்ப பழங்கள், இனிப்புக்கள், அரிசி மற்றும் கொதுமைகளினால் செய்த பண்டங்கள் போன்றவற்றை பிரசாதமாக படைத்து பூஜைகளை செய்கிறார்கள். என்ன பிரசாதம் படைக்க வேண்டும் என்ற நியதி எதுவும் இடையாது. ஏழு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் அந்த பூஜை பௌர்ணமிக்கு பத்தாம் நாள் அன்று துவங்கி அம்மாவாசைக்கு முதல் நாள் முடிவடையும். அந்த பூஜையை செய்ய துலா அல்லது கார்த்திக் மாதங்கள் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

ஒரிசாவின் வடக்கு பகுதிகளில் உள்ள பலசூர் என்ற நதிக் கரை ஓரப் பகுதிகளில் உள்ளவர்கள் செய்யும் பூஜை மாறுபட்டதாக உள்ளது. ஆண் மழலை செல்வம் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் பூஜை மார்சிகா எனப்படும் விருச்சிக மாதம் முதல் நாளில் துவங்கி மறுநாள் விடியும் வரையில் மட்டுமே நடைபெறும். அதாவது ஒரே ஒரு நாள் பூஜையாகவே செய்யப்படும் அதை பிராகாரா என்கிறார்கள். ஒரு நாளை எட்டுப் பகுதிகளாகப் பிரித்து, அதில் நான்கு பிராகாராக்களைக் கொண்ட இரவில் மட்டுமே நடைபெறும் பூஜையாக செய்கிறார்கள். நான்கு பிராகார பூஜையையும் நான்கு பண்டிதர்கள் ஒன்றுக்குப் பிறகு அடுத்ததாக தனித்தனியே செய்வார்கள். நான்கு பகுதிகளாக நடக்கும் பூஜையின் விசேஷ அம்சம் என்ன என்றால் மழலை செல்வேம் வேண்டும் என விரதம் இருக்கும் கணவன் அல்லது மனைவி என்ற இருவரும் ஹோம பூஜை துவங்கும் முன்னர் நான்கு வேளையும் குளிக்க வேண்டும்.

பூஜைக்குத் தேவையான அத்யாவசியப் பொருள் என்ன தெரியுமா? நாகு கத்திகள், பல்வேறு விளையாட்டுப் பொருட்கள் போன்றவை. காரணம் கார்திகேயப் பெருமான் சேனையின் அதிபதி என்பதினால் அந்த பூஜையில் கத்திகளும், மழலை செல்வத்தை அளிப்பவர் என்பதினால் விளையாட்டுப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டுமாம்.

அந்த பூஜையின் இன்னொரு சடங்கு நான்கு இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் பூமியின் மண் ஆகும். நான்கு இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் அந்த மண்ணை எங்கிருந்து எடுத்து வர வேண்டும்? ஒரு மாடு எந்த இடத்தில் பூமியில் தன் தலையை தேய்கின்றதோ அந்த இடத்து மண்ணைக் கொண்டு வர வேண்டும். அடுத்து எப்போதுமே ஒருவரை பின் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கும் லஷ்மி தேவியானவள், அவன் விலை மாதுவின் வீட்டில் நுழையும்போது மட்டும் உள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்று விடுவாளாம். ஆகவே லஷ்மி தேவி நின்று இருப்பதாக நம்பப்படும் விலை மாதுகளின் வீட்டு முன் புற வாயில் மண்ணை எடுத்து வர வேண்டும். அதற்குக் காரணம் மண்ணை எடுத்து வருபவர் கூட லஷ்மி தேவியும் வருகிறாள் என்பதே. மூன்றாவது பல இடங்கள் ஒன்று சேரும் முச்சந்தியின் இடத்தில் உள்ள மண்ணை எடுத்து வர வேண்டும். நான்காவது நதிக் கரையில் இருந்து மண்ணை எடுத்து வர வேண்டும். இவை அனைத்தையும் தவிர கர்பத்தைக் குறிக்கும் -சிறிய நெல் விதை பயிராகி நெற்கதிர்களை உருவாக்கும்- நெல்லையும் கொண்டு வர வேண்டும்.

இன்னொரு முக்கியமான காரனத்திற்காகவும் கார்த்திகேய விரதம் இருக்கின்றார்கள். கன்யா மற்றும் அஸ்வினி மாதங்களில் செய்யப்படும் இந்த விரதம், தனக்கு கிடைக்கப் போகும் கணவர் கார்திகேயப் பெருமானைப் போலவே அழகானவராகவும், நல்ல பலசாலியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நடை பெறுகின்றது. தசரா விழா காலங்களில் தோன்றும் பூர்ண சந்திரன் தினத்தை 'குருபூர்ணிமா' என அழைத்து ஆடல்கள், பாடல்களை நடத்தி அதை பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள். சிலர் அன்று 'கோஜாகாரி பூர்ணிமா' என்ற பெயரில் கஜலஷ்மிக்கும் பூஜைகளை செய்கிறார்கள். இந்த ஒருநாள் பண்டிகைக் கடைபிடிக்கும் பெண்கள் காலை வேலைகளில் சமையல் செய்த மற்ற பண்டங்களை உண்ணாமல் தயிர், மோர், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டும், பூஜையை முடித்தப் பின் இரவில் மட்டும் சமைத்த உணவை உண்டு கொண்டும் இருப்பார்கள். விரத காலம் முடியும்வரை சிலர் அரிசி உணவையே உன்ன மாட்டார்கள். சில இடங்களில் இந்த பூஜை 'பத்ரவ' மாதத்தில் வரும் 'ஜன்ஹி ஹோஷாவில்' துவங்கி 'அஸ்வினி'யின் 'குமார பூர்ணிமா'வரை அதாவது பௌர்ணமியில் துவங்கி அடுத்த பௌர்ணமி வரை ஒரு மாதம் கடைபிடிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

பூஜை தாமதமாக துவங்கினால் விரதம் இருக்கும் பெண்ணுக்கு கிடைக்க உள்ள கணவரும் வயதானவராகவே இருப்பாராம். குமார பூர்ணிமா தினத்தின் மாலையில் சந்திரன் உதித்ததும் துவங்கும் பூஜை விடியற் காலை வரை நடைபெறும். பூஜைக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுவது துளசி செடிதான். ஆகவே சந்திரோதயத்தைப் பார்த்து விட்டு உடனே அங்கேயே துளசி செடிக்கு பூஜையைத் துவங்கும் வகையில் இருப்பதற்காக துளசி செடியை வெட்டில் தக்க இடத்தில் வைப்பார்கள். பூஜைக்குத் தேவையான மலர் வெள்ளை நிறமான லில்லிப் பூ ஆகும் . பூஜை முடிந்தப் பின் பெண்கள் தமது கைகளில் நெற்கதிர்களை ஏந்தியபடி ஏழுமுறை சந்திரனுக்கு தீபாராதனைப் போல அதைக் காட்டியப் பின் நமஸ்கரிப்பார்கள். பூஜையை தனித்தனியாகவோ இல்லை கூட்டாக சேர்ந்தோ செய்வார்கள். இந்த பூஜையை செய்ய பண்டிதர்கள் யாரும் தேவை இல்லை. பூஜை முடிந்ததும் அவரவர் வீடுகளுக்குச் சென்று இனிப்புக்களையும், பிரசாதங்களையும் கொடுத்து மகிழ்ச்சி அடைவார்கள். புத்தாடை உடுத்தியப் பெண்கள் ஆடல் பாடல்களுடன் இரவைக் கழிக்கின்றார்கள். ஆக இருவிதமான வேண்டுகோட்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக அதாவது குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காகவும் இரண்டாவதாக நல்ல பலசாலியான, அழகான கணவன் அமைய வேண்டும் என்பதற்காகவும் இருவிதமான பண்டிகைகள் கார்திகேயருக்குக் கொண்டாடப்படுகின்றன. இவற்றில் முக்கியமாக இரண்டாவது காரணத்துக்காகவே இந்த பூஜை நடைபெறுகின்றது. இதில் ஆண்களும் கலந்து கொள்கிறார்கள்.

ஓவொரு வருடமும் வரும் ஏழாவது மாதமே கார்த்திகை மாதம் ஆகும். வெகு புனிதமாகக் கருதப்படும் இந்த மாதத்தில் அனைத்து மக்களும், முக்கியமாக விதவைகள், முதியோர் என ஆண் பெண் என்ற பேதம் இன்றி அனைவரும் அசைவ உணவு உண்பதில்லை. இந்த கடுமையான சடங்கில் இளம் வயதினரும் கலந்து கொள்கிறார்கள். குறைந்தபட்ஷம் ஐந்து பஞ்சாங்க தினங்களிலாவது சைவ உணவை மட்டுமே உண்கிறார்கள். குமார பூர்ணிமாவில் துவங்கும் இந்த விரதம் கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் முடிவு அடைகின்றது.

இந்த புனித மாதத்தில் விரதம் இருப்பவர்கள் அனுதினமும் குளித்தப் பின் அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று பக்தி வழிபாட்டில் ஈடுபடுவார்கள். இந்த தினங்களில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒரிசா கவிஞ்சரான 'மஹாதேவ தாசா' என்பவர் எழுதிய 'கார்த்திகேய மகிமா' என்ற நூலைப் படிப்பதும் உண்டு. மேலும் பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரியா துறவியான 'ஜகன்னாத தாசா' என்பவர் எழுதி உள்ள மற்றொரு முக்கியமான புராண நூலான 'ஸ்ரீமத் பாகவதம்' என்பதையும் படிப்பது உண்டு. அதை எவர் மூலமாவது காலட்ஷேபம் போலக் கூறி கேட்பது ஒரு சடங்கு ஆகும். கார்த்திகை மாதங்களில் வாழை இலையில் செய்த சிறு படகுகளில் எண்ணை விளக்கை ஏற்றி அதில் பூக்களைப் போட்டு நதிகளில் மிதக்க விடுவார்கள்.

இந்தியப் புராணங்களில் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஏதாவது ஒரு கடவுள் காரணமாக இருந்திருப்பார் என்பதை விளக்கும் விதத்தில் உள்ளது மஹாதேவ தாசாவின் நூலான 'காத்திகேய மகிமா'. அந்தக் கதையின்படி ஒருமுறை சிவனும் பார்வதியும் உறவு கொண்டு இருந்தபோது அதனால் பிறக்க இருக்கும் மகன் மூன்று உலகையும், அதாவது ஆகாயம், பூமி மற்றும் பாதாளம் போன்ற அனைத்தையும் அடக்கி ஆளும் வகைக்கான பலசாலியாக இருப்பான் என அஞ்சிய மற்ற தேவர்கள் அப்படி நடந்து விடக் கூடாது என்பதற்காக பிரும்மாவிடம் சென்று அந்த உறவு நடைபெறாமல் தடுக்க தேவையானதை செய்ய வேண்டும் என்றார்கள். அதனால் சிவனும் பார்வதியும் உறவு கொண்டு இருந்த இடத்துக்குப் போய் 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை அங்கு நின்றபடி தொடர்ந்து உரத்தக் குரலில் உச்சரித்துக் கொண்டு இருக்க தன்னை அந்த கோலத்தில் யாரோ பார்த்து விட்டாரே என்று நினைத்த சிவபெருமான் வெட்கத்தினால் அங்கிருந்து ஓடிவிட்டாராம். அதனால் கோபம் அடைந்த பார்வதி, பிரும்ம, விஷ்ணு மற்றும் சிவபெருமான் போன்ற மூவரையும் அவர்கள் நகர முடியாதபடி இருக்க வேண்டும் என சாபம் இட்டாளாம். இப்படியாக ஏற்பட்ட சாபத்தினால்தான் பிரும்ம, விஷ்ணு மற்றும் சிவ பெருமான் என்ற மூவரும் ஆல, அரச, வேப்ப மரங்கள் ஆகி விட்டார்களாம். ஆகவே இந்த மூன்று மரங்களும் உருவானக் கதையின் பின்னணி கார்த்திகேயராகவே உள்ளார்.

அந்த தடைப் பட்ட உறவின் மூலம் பிறந்த கார்திகேயப் பெருமான் பார்வதியின் கருவில் வளராமல் வெளியில் இருந்தபடி வளர்ந்து வந்தாராம். ஆகவேதான் எந்த தனி ஆலயமும் அவருக்கு ஒரிசாவில் இல்லாமல் அவரை இரண்டாம் நிலைக் கடவுளாகவே அங்கு அவரை வணங்குகிறார்கள்.



இந்த கட்டுரையை எழுதியவர் ஒரிசா மானிலத்தின் சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். அவர் ஒரிய நாட்டுப்புற மக்களைப் பற்றிய கட்டுரைகள் பலவும் எழுதி உள்ளார். அவர் விலாசம்:
Dr. Kailash Pattanaik
Reader, Dept. of Oriya
Vishva-Bharati
Shanti Niketan, West Bengal, India
E-mail : pkailash@chequemail.com

Index of research articles on Skanda-Murukan